Last Updated:
ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் உள்நாட்டு மேம்பாட்டை ஆதரிப்பதற்காக ரயில்வே அமைச்சகம் மே 2022ம் ஆண்டு ஐஐடி மெட்ராஸுக்கு ரூ.8.34 கோடி நிதியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
ஐஐடி மெட்ராஸின் ஹைப்பர்லூப் சோதனை வசதியைப் பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த திட்டமானது விரைவில் உலகின் மிக நீளமான ஹைப்பர்லூப் சோதனைக் குழாய் என்ற பெருமையைப் பெறும் என்று கூறியுள்ளார்.
தற்போது, 410 மீட்டர் நீளமுள்ள இந்த சோதனை வசதி ஆசியாவின் மிக நீளமான ஹைப்பர்லூப் சோதனைப் பாதை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 2013ம் ஆண்டில் எலான் மஸ்க் முதன்முதலில் முன்மொழிந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பம், ஒரு அதிவேக போக்குவரத்து அமைப்பாகும். இது வெற்றிட சீல் செய்யப்பட்ட குழாய்களைப் பயன்படுத்தி மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் காப்ஸ்யூல்களை செலுத்துகிறது. இந்த புரட்சிகரமான கண்டுபிடிப்பு பயணத்தை வேகமாகவும், திறமையாகவும், சுற்றுச்சூழலுக்கு எந்த ஆபத்தும் இல்லாத வகையில் மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
சென்னையின் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஹைப்பர்லூப்பிற்கான மின்னணுக் கூறுகளை தயாரிக்கும் திட்டத்தையும் வைஷ்ணவ் அறிவித்தார். இது உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில், இந்தியாவின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இதன் நேரடி செயல் விளக்கத்தைப் பகிர்ந்துகொண்ட மத்திய அமைச்சர், “ஆசியாவின் மிக நீளமான ஹைப்பர்லூப் குழாய், (410 மீ) விரைவில் உலகின் மிக நீளமானதாக மாறும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் உள்நாட்டு மேம்பாட்டை ஆதரிப்பதற்காக ரயில்வே அமைச்சகம் மே 2022ம் ஆண்டு ஐஐடி மெட்ராஸுக்கு ரூ.8.34 கோடி நிதியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. ஹைப்பர்லூப் போக்குவரத்தை ஏற்றுக்கொள்ளும் திறன் இந்தியாவிற்கு இருக்கிறது என்றும் நம்பிக்கை தெரிவித்த வைஷ்ணவ், நடந்துவரும் சோதனைகளில் இருந்து ஊக்கமளிக்கும் முடிவுகளை எடுத்துக் காட்டினார். மேலும், இந்த ஹைப்பர்லூப் சோதனை முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனை உருவாக்கி வரும் இளம் கண்டுபிடிப்பாளர்களின் சாதனையையும் அமைச்சர் பாராட்டினார்.
ஐஐடி மெட்ராஸின் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்த திரு.வைஷ்ணவ், “இந்த இடம் விவரிக்க முடியாத அளவுக்கு ஆற்றல் நிறைந்தது. இளம், துடிப்பான பொறியாளர்கள் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் பணியாற்றுவதையும் புதிய சோதனைகளை செய்வதையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் சிறிய உதவிகளை மட்டுமே வழங்குகிறோம். இது உண்மையில் நாட்டிற்கும், நமது மக்களுக்கும், நமது ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், தொழில்நுட்ப உலகிற்கும் நல்ல தீர்வுகளுக்கு இட்டுச் செல்லும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்தார்.
இதையும் படிக்க: காவல்நிலையத்தில் வைத்து கணவரை தாக்கிய குத்துச்சண்டை வீராங்கணை ஸ்வீட்டி பூரா..! சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்
ஐஐடி மெட்ராஸ் கடந்த ஏழு ஆண்டுகளாக ஹைப்பர்லூப் ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த நிறுவனம் அதன் டிஸ்கவரி வளாகத்தில் மாணவர்களால் இயக்கப்படும் 422 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் சோதனைக் குழாய் மற்றும் பாதை உள்ளிட்ட அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க சாதனையாக, ஐஐடி மெட்ராஸ் சமீபத்தில் ஆசியாவின் முதல் உலகளாவிய ஹைப்பர்லூப் போட்டியை இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் ஆதரவுடன் நடத்தியது.
இதற்கிடையில், ஐஐடி மெட்ராஸில் நிறுவப்பட்ட தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான TuTr ஹைப்பர்லூப், உலகின் முதல் வணிக ஹைப்பர்லூப் தொழில்நுட்ப அடிப்படையிலான திட்டத்தை அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த புரட்சிகர முயற்சி ஆத்மநிர்பர் பாரத் மற்றும் விக்ஷித் பாரத் 2047 இலக்குகளை அடைவதற்கான ஒரு முக்கிய படியாகும்.
March 24, 2025 4:53 PM IST
இந்தியாவின் ஹைப்பர்லூப் குழாய் உலகின் மிக நீளமானதாக மாறும்; ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்…!

