2008 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில்தான் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறி வரும் போதிலும், சுங்கக்கட்டணத்தை உயர்த்த எந்தவிதமான நியாயமும் இல்லை. எந்த ஒரு கட்டமைப்பின் பயன்பாட்டுக்கான கட்டணமும் அதன் வரவு, செலவு மற்றும் லாப, நட்டக் கணக்குகளின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய் குறித்து எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் அறமோ, நியாயமோ அல்ல.
தமிழ்நாட்டிலுள்ள பல சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பல சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீட்டைவிட கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுவிட்ட பிறகும் அங்கு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், முதலீட்டுக்கான வட்டி, பரமாரிப்புச் செலவுகள் போன்றவற்றை அதிகரித்துக் காட்டியும், சுங்கக் கட்டண வசூலைக் குறைத்துக் காட்டியும் மோசடிகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சுங்கச்சாவடியையும் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் கடக்கின்றன? அவற்றின் மூலம் எவ்வளவு ரூபாய் கட்டணம் வசூலாகியிருக்கிறது என்பதை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும்வகையில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், எந்த பயனும் ஏற்படவில்லை.
