ரயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை சந்தித்து நலம் விசாரித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரயில் விபத்துகள் தொடர்கதை ஆவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரித்ததுடன் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், காயமடைந்த அனைவருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ரயில் விபத்துகள் தொடர்கதையாவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
மேலும் ரயில் விபத்து காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.


👌👌👌👌